வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 2 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள இடத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

வடபழனி கோவிலுக்கு பல்நோக்கு கட்டிடம்

* சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல்நோக்குக் கட்டடம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* திருக்கோயிலுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களிலிருந்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கொள்கைகளை உருவாக்கிட தேர்ந்த ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.

* சென்னை கொசப்பேட்டை ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சந்தை ரூபாய் 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

* காரைக்குடி கொப்புடை நாயகியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சிதிலமடைந்த நகர வாரச் சந்தையை அகற்றி, ரூபாய் 1 கோடியே 50 லட்சம் செலவில் புதியதாக கட்டப்படும்.

* சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

* மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை ஏற்படுத்தப்படும்.

ஓதுவார் பயிற்சிப் பள்ளி

* சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயில்களில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில், புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

* திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான கோட்டா ஆறுமுகசாமி திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும்.

* திருவண்ணாமலை மற்றும் மதுரையில் அமைந்துள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

* திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி புதியதாகத் தொடங்கப்படும்.

வணிகவளாகம்

* திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும்.

* முதுநிலை திருக்கோயில்களின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் முழு விவரக்காட்சிக் கையேடுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்