இறைவனுக்கு இணையானவர்கள் ஆசிரியர்கள்: ஞானகுரு விருது வழங்கும் விழாவில் வந்தவாசி டிஎஸ்பி பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு ‘ஞான குரு’ விருது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் நல்லாசிரியரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான பெ. ஏழுமலை தலைமை வகித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
நூலக வாசகர் வட்ட தலைவர் கவிஞர் முருகேஷ், ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் வெ. விசுவேசுவரய்யா அவர்கள் பங்கேற்று பேசுகையில்:
“ஆசிரியர் பணி அறப்பணி. காவல்துறையில் பணியாற்றும் போதே இரு நூல்களை நான் எழுதி இருக்கிறேன் என்றால் அது தமிழாசிரியர் எனக்கு அளித்த ஊக்கம் தான் காரணம். பல்வேறு மாணவர்களை உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பவர்கள் தான் ஆசிரியர்கள் ” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் இந் நிகழ்வில் தெள்ளாறு அ.ம.உ.நி.பள்ளி தலைமை ஆசிரியை க. ஜான்சிராணி, கல்லாங்குத்து ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியை டி.எல்.சுமதி மீனா குமாரி, அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் ம.கா. செந்தில் குமார், வந்தவாசி ஆர்.சி.எம்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அ. திருமுகம், ஸ்ரீ பாரதமாதா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் அ. சதீஷ், மாற்றுத் திறனாளிகள் பள்ளி சிறப்பாசிரியர் எச். லத்தீப் ஆகியோருக்கு ஞானகுரு விருது, சான்றிதழ், புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல்.சிவக்குமார், பட்டதாரி ஆசிரியர் இரா. அருள் ஜோதி, சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ் பாபு, அன்னை அறக்கட்டளை நிர்வாகி ரா.நளினா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வை வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் கு. சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில் பேராசிரியர் க. பூபாலன் நன்றி கூறினார்.
