மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி
கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆசி பெற்று விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளர் ஜே.கார்த்திகேயனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.
அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோரது ஆசி பெற்று திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் டி.பெரியசாமிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.
இவர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகும் போது, உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்றுவார்கள்.
இருவரும் சுறுசுறுப்பானவர்கள், உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கின்றவர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள். திறமையானவர்கள்.
ஆகவே விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளார் ஜே.கார்த்திகேயனுக்கு மாம்பழம் சின்னத்திலும், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பளர் டி.பெரியசாமிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணா தி.மு.க. இன்றைக்கு மத்தியில் உள்ள ஆட்சிக்கு அடிபணிந்து போய்விட்டது என ஸ்டாலின் பேசி வருகின்றார்.
ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் சரியாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கின்ற ஆட்சி சுமூகமாக இருந்தால் தான் இங்கு வாழும் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.
இன்றைக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு அனுமதி வழங்குவது மத்திய அரசாங்கம். மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு அனுமதி பெற, தேவையான நிதி கிடைக்க மத்தியில் இணக்கமான ஒரு உறவு இருக்க வேண்டும்.
இணக்கமான உறவு இருந்தால் தான் தமிழ்நாடு ஏற்றம் பெறும். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் நாம் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும்.
கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு உதவி செய்தால் தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். அந்த அடிப்படையில் தான் நாம் கூட்டணி அமைத்துள்ளோம்.
கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் மிகப்பெரிய திட்டம். அதற்கு ரூ.80,000 கோடி நிதி வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு நீர் கிடைக்கப்பெற்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உணவு உற்பத்தி அதிகரிக்கும். குடிநீர் பிரச்சினை தீரும். ஒரு இணக்கமான சூழ்நிலை இருந்தால் தான் இது போன்ற பெரிய திட்டங்கள் நிறைவேற்ற முடியும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி அண்ணா தி.மு.க. கூட்டணி. தி.மு.க கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க இதே பாஜகவுடன் 1999ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள். அப்போதெல்லாம் விமர்சனம் செய்யவில்லை நாம் கூட்டணி வைத்தவுடன் விமர்சனம் செய்கின்றார்கள். தமிழக மக்கள் நலனுக்காக நாம் கூட்டணி வைத்துள்ளோம்.
ஆனால் தி.மு.க பாரதிய ஜனதவுடன், காங்ரஸுடன் என மாறி மாறி கூட்டணி அமைப்பார்கள். பச்சோந்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அது நிறம் மாறும், அது கொஞ்ச நேரம் கழித்து தான் மாறும். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உடனுக்குடன் மாறுவார்.
அப்படிப்பட்ட தலைவர் அண்ணா தி.மு.கவை விமர்சனம் செய்கிறார்.
விருத்தாசலம் மற்றும் திட்டக்குடியில் அதிக அளவு தடுப்பணைகளை கட்டியுள்ளோம்.
இதனால் தேவையான குடிநீர் விவசாயத்திற்கு கிடைக்கின்றது.
ஆகவே திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க, மக்கள் ஏற்றம் பெற விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளார் ஜே.கார்த்திகேயனுக்கு மாம்பழம் சின்னத்திலும், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பளர் டி.பெரியசாமிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்
