60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று காரணமாக அத்தியாவசியப்பணிகள் தவிர, பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. தற்போது நோய்த்தொற்று பெருமளவில் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கட்டணம் இல்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதியதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த டோக்கன்களை இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் காலை 8 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையும், மாதம் ஒன்றுக்கு 10 வீதம் (பிப்ரவரி முதல் ஜூலை வரை) 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பஸ் பயண டோக்கன்களை, அடையாறு, திருவான்மியூர், வடபழனி, அண்ணாநகர், அயனாவரம், வியாசர்பாடி உள்பட 21 பணிமனைகளிலும், சென்டிரல் ரெயில் நிலையம், பிராட்வே, கோயம்பேடு உட்பட 19 பஸ் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
புதிதாக விண்ணப்பிப்போர்
மேலும் புதிதாக விண்ணப்பிக்க, விண்ணப்பப்படிவங்கள் அந்தந்த மையங்களில் வழங்கப்படும்.

மேலும் மாநகர் போக்குவரத்துக் கழக வலைத்தள முகவரியான https://mtcbus.tn.gov.in/Home/senior_citizen/18-ல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அளிக்கும்போது வயது மற்றும் இருப்பிடப் சான்றுக்கான வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை அல்லது பள்ளி சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல் இணைக்கப்படவேண்டும்.

5 செ.மீ. மற்றும் 4 செ.மீ. அளவிலான பாஸ்போர்ட் அளவு தற்போதைய இரண்டு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
கட்டணம் இல்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்துக்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும்.

குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாக கருதப்படும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பஸ் வசதியை, சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களிலும் (குளிர்சாதன பஸ் நீங்கலாக) பயணம் செய்யலாம்.

மேற்கண்ட தகவல்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.