திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்

சமூகநலத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் பணிகளை மாவட்ட  ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமையில்
மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் எம்எல்ஏ  முன்னிலையில்

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா ஏழை, எளிய பெண்களின் திருமணம் தடைப்படக் கூடாது என்பதற்காக சமூகநலத் துறை மூலமாக திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டம் படித்த 1498 பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7.49 கோடி திருமண நிதியுதவியும், 10, 12 ஆம் வகுப்பு படித்த 1244 பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3.11 கோடி திருமண நிதியுதவியும், ஆக மொத்தம் 2742 பெண்களுக்கு ரூ.10.60 கோடி செலவில் திருமண நிதியுதவியும், ரூ.9.79 கோடி செலவில் தலா 8 கிராம் தங்க நாணயம், என மொத்தம் ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

மேலும், இன்று நடைபெறும் விழாவில் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 233 பெண்களுக்கும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 113 பெண்களுக்கும் ரூ.1.37 கோடி செலவில் திருமண நிதியுதவியும், ரூ.1.26 கோடி செலவில் தலா 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் ஏழை, எளிய சாமானிய குடும்பத்தில் பிறந்த காரணத்தால், மக்களின் கஷ்டங்கள் அறிந்து திட்டங்கள் செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், மேம்படுவதற்கும் உதவி செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், ஆரணி நகர கழக  செயலாளர் அசோக்குமார், ஆவின் துணை சேர்மன் பாரி பி. பாபு, ஆரணி ஒன்றிய கழக செயலாளர்கள் பிஆர்ஜி. சேகர், அனக்காவூர் துரை, செய்யார் மகேந்திரன், அரங்கநாதன், மேற்குஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் எஸ். ஜோதிலிங்கம், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.