புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளரும், சட்டமன்ற அதிமுக கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ., இன்று (19.01.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பயன்பெறுவதற்காக சட்டமன்றத்தை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு சட்ட மன்ற நடத்தை விதிகளுக்கு விரோதமாக பயன்படுத்தி வருகிறது.
மாநிலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் சூழ்நிலையில் கடந்த ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டிற்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது.
அதன்பிறகு தனியார் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கொரோனா வரியை குறைப்பதற்காக சட்டமன்ற கூட்டத்தை பயன்படுத்தினார்கள்.
அந்த வரிசையில் நேற்றைய தினம் தனியார் கிரிக்கெட் மைதான உரிமையாளர் நலனிற்காக சட்டமன்றத்தை கூட்டியுள்ளனர். இதில் மாநில அந்தஸ்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தீர்மானம் என நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.
வேளாண் சட்டம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இங்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியும், மத்திய அரசின் சட்ட நகலை மாண்புமிகு முதல்வர் நாராயணசாமி கிழித்து எரிந்தும் ஒரு சிறப்பான நாடகத்தை அரங்கேற்றினார்
புதுச்சேரி சட்டப்பேரவை சட்டமன்ற நடத்தை விதிகள்படி ஒவ்வொரு அலுவல் நேரத்திலும், கேள்வி நேரம் முடிந்தவுடன் மாநிலத்தின் மக்கள் நலன் சார்ந்த மிக, மிக முக்கியமான அவசியமான விஷயங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவர உருவாக்கப்பட்டது பூஜ்ய நேரம். நேற்றைய தினம் கேள்வி நேரமே இல்லாத ஒரு நிலையில் பூஜ்ய நேரம் என சபாநாயகரால் அனுமதிக்கப்பட்டு, ஐந்தாறு ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மாண்புமிகு முதலமைச்சர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தைப் பற்றி பேசியுள்ளனர்.
அதன்பிறகு ஒரு சிலர் இந்த பிரச்சனையில் துணை நிலை ஆளுனர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து வசை பாடினர். அரசு இடத்தை திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்ததால் நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனை குறித்து பெரிய பட்டிமன்றமே நேற்றைய சட்டமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற நடத்தை விதிகளின்படி என்பது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் குறைந்தது 11 சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இல்லாதபோது மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சட்டமன்றத்தை தொடர்ந்து நடத்தியுள்ளார்.
மேலும் சபையில் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோது வேளாண் எதிர்ப்பு சட்டத்தை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இவையெல்லாம் செல்லுபடியாகுமா என்று கூட தெரியவில்லை. சட்டமன்ற நடவடிக்கையையே ஆளும் அரசு தங்களது சுய நலத்திற்காக பயன்படுத்துவது என்பது வெட்க கேடான செயலாகும்.
புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஆளும் அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்காமல், நிதி கமிஷனில் புதுச்சேரி மாநிலத்தை சேர்க்காமல் பிரதமர் மோடி பழிவாங்கிவிட்டார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழக்கமான ஒரு பொய் பூதத்தை அவிழ்த்து விட்டுள்ளார்.
மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான் மத்திய பொது கணக்கில் இருந்த புதுச்சேரியை தனி கணக்கு துவக்க நிர்பந்தப்படுத்தி, தனி கணக்கை துவக்க வைத்தனர்.
அன்றையில் இருந்து நமது மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதி முழுமையாக குறைக்கப்பட்டது.
மத்திய நிதி குழுவில் புதுச்சேரி மாநிலத்தை சேர்க்காததற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த திமுகவும், காங்கிரசும்தான் காரணம் ஆகும்.
அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திற்கு இன்றுவரை மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி இருந்த நிலையில் ஏன் மாநில அந்தஸ்தை காங்கிரஸ் அரசு நமக்கு வழங்கவில்லை.
புதுச்சேரி மாநிலத்தை எப்போதும் ஒரு அடிமை மாநிலமாக மத்திய காங்கிரஸ் அரசு நடத்தி வந்தது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அல்லாத என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றியபோது, அப்போது மத்தியில் சர்வ வல்லமை படைத்தவராக இருந்த நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து தேவையில்லை,
சிறப்பு மாநில அந்தஸ்துதான் தேவை என்று போகாத ஊருக்கு வழிகாட்டி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
தற்போது முதலமைச்சர் பதவியில் உள்ள நாராயணசாமி அவர்கள் மாநில அந்தஸ்தை பாஜக நமக்கு தரவில்லை என கண்டித்து தீர்மானத்தை கொண்டு வருகிறார்.
மத்தியில் நீண்ட நெடுங்காலம் ஆட்சியில் இருந்த திமுகவும், காங்கிரசும் நினைத்து இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைத்திருக்கும். கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும், மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் எதையும் செய்யாமல், நம் மாநிலத்திற்கு துரோகம் இவ்விரு கட்சிகளும் செய்து வருகின்றனர்
இன்று மக்களை ஏமாற்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
