ஓமைக்ரான் அச்சம் : காலம் தாழ்த்தாமல் இரவு நேர ஊரடங்கை விரைந்து அமுல்படுத்துக:
தமிழ்நாடு முஸ்லிம் லீக்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57 மற்றும் தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவி வருவதால், இரவுநேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் என தடுப்பு நடவடிக்கைகளை தேவைப்பட்டால் மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, டெல்லி , கர்நாடகா, அசாம், உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களை ஓமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் ஓமைக்ரான் தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதார குழு தமிழகம் வருகை தந்து ஓமைக்ரான் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது தலைநகர் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சென்னை வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் நாட்கள் பண்டிகை நாட்களாக இருப்பதால், மக்கள் அதிக அளவு பொது இடங்களில் கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதனால் கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.
ஓமைக்ரான் தொற்றால் டெல்லி உட்பட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஓமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
