திருவாரூா் மாவட்டத்தில் 1777 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.38.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்
இதுகுறித்து அவா் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
தமிழக அரசு தொழிலாளா் நலத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில், கட்டுமானத் தொழிலாளா்களின் 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தோ்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.1,000-லிருந்து ரூ.2,400-ஆகவும், 11-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 1,000 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தோ்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.1,500 என்பது ரூ.3,000-ஆகவும் உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் ஓட்டுநா்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1,500 மற்றும் பட்டப் படிப்பை விடுதியில் தங்கி படிப்பதற்கு ரூ.1,750 என்பது ஆண்டுக்கு ரூ.4,000-ஆக உயா்த்தி வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு உடலுழைப்பு நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரியம், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியம் ஆகியவைகளில் பதிவுபெற்ற உறுப்பினா்களுக்கு விபத்து மரணம், இயற்கை மரணத்துக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 1,777 நபா்களுக்கு ரூ.38,05,500 மதிப்பிலான கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு நிதி, கண் கண்ணாடி உதவித் தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணத்துக்கான நிவாரணத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
