பருவகால காய்ச்சலிருந்து காக்கும் பொருட்டு – பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீரை விரைந்து வழங்குக!
:
அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள செய்தி:
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த நிலையில், தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
மழைகால நோய் தொற்று பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக மழை பெய்துள்ள மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை அரசு நடத்தி வருகிறது.
இருந்த போதிலும் `பருவமழைக் காலம் முடியும் வரையிலும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி குறையும் வரையிலும் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டுமென தமிழக முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன்.
“நிலவேம்பு கசாயம் என்பது பாரம்பர்ய சித்த மருந்து. அதில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகள் சம அளவு கலக்கப்பட்டுள்ளன.
மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ் நிலவேம்பு கசாயத்தை, `மருந்து’ என ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளது.
காய்ச்சல் வந்தவர்களுக்கு மருந்தாகவும், வராதவர்களுக்குத் தடுப்பு மருந்தாகவும் இது கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நிலையில், டெங்கு காய்ச்சலிருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் பொருட்டு, சந்தை, பேருந்து நிலையம், பூங்கா, கடற்கரை என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் என மக்கள் தினந்தோறும் வரும் அரசு அலுவலகங்களிலும் நிலவேம்பு குடிநீரை வழங்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
