விவசாயிகளே கொன்றார்கள் எனக்கூற மிரட்டல் – லக்கிம்பூரில் பலியான பத்திரிகையாளர் குடும்பம்

விவசாயிகள் தான் அடித்துக்கொன்றதாக

குற்றம் சாட்ட அழுத்தம் கொடுக்கப்படுவதாக லக்கிம்பூர் கேரியில் உயிரிழந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட 8 பேரில் ஒருவர் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப். ராமனுக்கு மனைவி, 12 வயது மகள், இரண்டரை வயது மகன் மற்றும் தந்தை, இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.

தற்போது அவரின் குடும்பத்தினர் பரபரப்பான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய ராமன் காஷ்யப்பின் சகோதரர் பவன்,

“நானும் எனது தந்தையும் எல்லோரிடமும் ஒரே கருத்தைத்தான் தெரிவித்துள்ளோம், எனது சகோதரர் ராமன் காஷ்யப் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகனத்தில் நசுங்கி சுடப்பட்டுத்தான் கொல்லப்பட்டார்.

ஆனால் பல பத்திரிகையாளர்கள் இப்போது விவசாயிகள்தான் அவரை அடித்து கொன்றார்கள் என்று சொல்ல எங்களை குறுக்கு கேள்வி கேட்கிறார்கள். அது நடக்கவில்லை, ”என்று கூறினார்.

பாரதிய கிஷான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், ராமன் காஷ்யப் தியாகியாக கருதப்படுவார் என்று கூறினார்.  இது தொடர்பாக பேசிய பவன்,

“என் சகோதரர் ஒரு பத்திரிகையாளர் ஆனால் நாங்கள் விவசாயிகளின் குடும்பம், டிக்கைட் கூறியது சரிதான். நாங்கள் இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெறவில்லை.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆருடன் எங்கள் புகாரை இணைக்க ஒரு நடைமுறை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. விவசாயிகளின் எஃப்.ஐ.ஆர் எங்களோடு இணைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

முன்னதாக, ஊடகங்களுக்கு எதிரான பவனின் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ வைரலாகப் பகிரப்பட்டது. “

விவசாயிகள்தான் என் சகோதரனை தாக்கினார்கள் என அவர்கள் நம் வாயில் வார்த்தைகளை வைக்க முயற்சி செய்கிறார்கள், அது நடக்கவில்லை என்று நாங்கள் கூறினோம்”என்று அவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.

“பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் அவர்கள் கதைகளை உருவாக்குகிறார்கள். நான் பிணவறையில் இருந்தேன், அவருடைய காயங்களை நான் பார்த்தேன். அவர் குச்சிகளால் அடிக்கப்படவில்லை. ஒரு போலி வாட்ஸ்அப் தகவலின் அடிப்படையில் இந்த கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன” என்று கூறுகிறார்

ஏற்கனவே நேற்று விவசாயிகள் மீது கார் ஏறிய ஒரு வீடியோ வெளிவந்த நிலையில், இப்போது அதனை மற்றொரு கோணத்தில் காண்பிக்கும் புதிய வீடியோவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லக்கிம்பூர் கெரியில் நடந்த மரணங்கள் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.