தமிழக காவல்துறையில் கடந்த 8 மாதங்களில் வீர மரணம், விபத்து, நோய் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் மொத்தம் 297 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

தமிழக காவல்துறையில் மொத்தம் 1 லட்சம் காவல் ஆளுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் மரணமடைந்தோரின் புள்ளி விவரம் தமிழக காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 29 பேரும், பிப்ரவரி மாதம் 22 பேரும், மார்ச் மாதம் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏப்ரல் மாதம் 48 பேரும், மே மாதம் 83 பேரும், ஜுன் மாதம் 37 பேரும், ஜுலை மாதம் 37 பேரும், ஆகஸ்ட் மாதம் 25 பேரும் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

இவர்களில் கொரோனா பாதிப்பால் 76 பேரும், 25 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வீர மரணம் அடைந்ததில் ஒருவரும், சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 3 பேரும், மாரடைப்பால் 40 பேரும், விபத்தில் சிக்கி 46 பேரும், புற்று நோயால் பாதிப்படைந்து 16 பேரும், பாம்பு கடித்து ஒருவரும், கொலை செய்யப்பட்டு ஒருவரும் என மொத்தம் 297 காவல் ஆளிநர்கள் இந்த 8 மாதங்களில் உயிரிழந்துள்ளனர் என்பது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் 337 காவலர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது