பண்டிகைகளால் அதிகரிக்கும் தொற்று… கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பண்டிகை கொண்டாட்டங்களால் ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது வரும் செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் தொடர்பாக சில அறிவுறுத்தல்களையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை 12,000 என்ற அளவில் தான் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. இதனிடையே இந்த எண்ணிக்கை 20,000 என்ற அளவில் இருந்து வந்தது.
ஆனால் திடீரென இந்த பாதிப்பின் அளவு 31,000 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு கேரளாவில் அதிகரிக்க ஒணம் பண்டிகை முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.
எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மாநில சுகாதாரத்துறையினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
அங்கு கடந்த 5 நாட்களில் மட்டும் புதிதாக ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. அதில் ஒரு சில மாநிலங்களிள் உள்ளூர் பரவலை தவிர்த்து தேசிய அளவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது,
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், கவலை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக கடைப்பிடித்து வரும் பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை, புதிய நெறிமுறைகள் வெளியிடுதல் போன்ற 5 அம்ச நடவடிக்கையை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவைக்கு ஏற்ப தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
