கொரோனா பரவலில் அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியம்: மக்கள் நல்வாழ்வுத் துறை

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிக்காமல் இருக்க, அடுத்த 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது:

இந்திய அரசிடமிருந்து இந்த மாத தொகுப்பில் தற்போது வரை 63.76 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மீதமுள்ள 16.75 லட்சம் தடுப்பூசியும் விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதுபோன்று, செப்டம்பர் மாதத்திற்கு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளது.

தற்போது நம்மிடையே கையிருப்பில் இருக்கும் 14 லட்சம் தடுப்பூசிகள் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

10 நாட்கள் எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக பேசிய அவர், “ நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதுபோன்று தமிழ்நாட்டில் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

பக்கத்து மாநிலங்களுக்கு வேலைக்காக நாள்தோறும் சென்றுவரும் எல்லைப்பகுதி ஊர்களில், 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டிற்கு 2.35 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனால் தற்போது தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது,

அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று 2 லட்சத்து 35 ஆயிரத்து 200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்துள்ளது.

மாலையில் மாவட்டங்களுக்கு தடுப்பூசி பிரித்து அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இதுவரை, 3 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.