கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி – புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதம் குறைக்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 2021-22ஆம் ஆண்டிற்கு 9,924 கோடிக்கான பட்ஜெட்டை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

அதில் வேளாண்துறைக்காக 124 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் பருப்பு, எண்ணெய் மற்றும் தானிய வகைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்காக 197 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க சென்ற மீனவர் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதம் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி அரசு பெற்ற கடன் தொகை ரூ.9,334 கோடியாக உள்ளது.

மேலும் நிதி பற்றாக்குறைய சமாளிக்க ரூ.1,684 கோடியை வெளிச்சந்தையில் கடனாக பெற மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு 5 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் வேளாண்துறைக்காக ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியை பெருக்க, பெண் கன்றுகளை மட்டுமே உருவாக்கும் பொருட்டு இனம் பிரிக்கபட்ட உறைவிந்து தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க நடமாடும் மருந்தகங்களை செயல்படுத்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து ரேசன் கடைகளிலும் பருப்பு, எண்ணெய் மற்றும் தானிய வகைகளை விற்பணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்காக ரூ.197 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டில் ரூ.2.40 கோடி செலவில் 100 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் எனவும் மருத்துவம் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்காக காமராஜர் மாணவர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலில் அளவு உயர்த்தி வழங்கப்படும் எனவும் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் அனைத்து கோயில்களில் உள்ள சிலைகள் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அசையா சொத்து விபரங்கள் அனைத்தும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.