குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசு தான் திமுக அரசு, மக்களுக்கு பாதுகாப்பான அரசில்லை என சட்டப்பேரவையில் வெளிநடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு தேவையற்ற பொய் வழக்குகளை போட முயற்சிப்பதாக கோரி அதிமுக அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கொடநாடு இல்லத்தில் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.

அவரது மறைவிற்கு பின் சில கொள்ளை கும்பல் கொள்ளையடித்துள்ளது.

அது யாரென்பது அனைவருக்கும் தெரியும்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதோடு அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு  வரும் 28 ம் தேதி விசாரணைக்கும் வர உள்ளது.

இந்த நிலையில் எங்களை அச்சுறுத்த திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்

திமுக அரசு திட்டமிட்டே என் மீதும் முன்னாள் அமைச்சர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்.

திமுக தேர்தலில் போது 505 க்கும்  மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் அதனை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப இந்த பொய் வழக்கு முயற்சியை கையிலெடுத்துள்ளதாக கூறிய அவர் திமுக அரசின் இப்போக்கிற்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார்.

எங்கள் மீது பொய் வழக்கு போடும் முயற்சி நடந்து வந்துள்ளதாக கூறிய அவர் எங்களை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும், தமிழக மக்களுக்கான பாதுகாப்பை  இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

எங்களை முடக்க நினைப்பது எப்போதும் நடக்காது என்ற அவர் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நேரமில்லா நேரத்தில் நான் என்னுடைய பிரச்சனையை பேச முற்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினருக்கு பிரச்சனையை எழுப்ப  உரிமை உண்டு என்றார்

இன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்கின்றனர்.

அதன்படி,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,”கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடு இல்லை,பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக,நீதிமன்ற தீர்ப்பின்படியே விசாரணை நடைபெறுகிறது.
அதன்படி, உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.