ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு இல்லை… மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் இடைக்

காலஅரசுகுறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் அமைதி நிலவே விரும்புவதாகவும் மக்களை அச்சுறுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
மேலும் அதிபராக இருந்த அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை அதிபர் சலேவும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமைச்சர் அகமது ஜலாலி தலைமையில் இடைக்கால அரசு அமையும் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு தலிபான்கள் ஏற்பார்கள் என தெரியவில்லை என செய்திகள் கூறின.
இந் நிலையில் இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
எங்களது நோக்கமே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான்.
அங்குள்ள வளத்தை கொள்ளையடிப்பது எங்கள் நோக்கமல்ல. அது போல் இடைக்கால அரசு அமையும் என கூறுவது எல்லாம் வதந்திகள்,இடைக்கால அரசை அலி அகமது ஜலாலி ஏற்று நடத்துவார் என்பதை ஏற்க முடியாது.
இதுகுறித்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே எல்லாமே வதந்திதான்.
ஆப்கனில் அமையும் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என நிறைய யூகங்கள் வலம் வந்தன. இதுகுறித்து இன்னும் எங்கள் இயக்கம் முடிவு செய்யவில்லை. யார் எந்த துறையை ஏற்று நடத்துவார்கள் என்றும் தெரியவில்லை. தலிபான்களின் துணை கமாண்டராக உள்ள முல்லா அப்துல் கானி பராதார் (எ) முல்லா பராதார் அக்குந்த் அதிபராக வாய்ப்பு என பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
நாங்கள் இஸ்லாமிய இயக்கம் என்பதால் நாங்கள் அமைக்கும் அரசும் இஸ்லாமிய ஷரியத்தின் அடிப்படையில் அமையும். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவவே விரும்புகிறோம். முன்பு இருந்த அரசியல் தலைவர்களை பழி வாங்கும் நோக்கமில்லை. நல்லாட்சியை நடத்துவோம்.
எங்களை பார்த்து யாரும் அச்சமடைய தேவையில்லை. யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை.
நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம். முஜாஹிதீன்கள் காபூலில் நுழைந்ததே அமைதியை ஏற்படுத்தத்தானே தவிர யாரையும் துன்புறுத்த அல்ல.
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
எனவே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் நாடு திரும்புங்கள். ஷரியா (ஷரியத்) சட்டம் மற்றும் விதிகளின் படி பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும்.
மாணவர்களும் படிக்க அனுமதிக்கப்படுவர். ஆப்கானிஸ்தானில் நல்ல கல்வி தேவை.
தூதரகங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அவர்களுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறோம். உலக நாடுகளுடன் ஒன்றி வாழ ஆப்கானிஸ்தான் விரும்புகிறது.
ஆப்கனில் விரைவில் தலிபான்கள் ஆட்சி..
அவர்களை நாங்கள் பாதுகாப்போம் என உறுதியளிக்கிறேன். மற்ற நாடுகளுடனுடன் நல்லுறவை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளில் நாங்கள் தலையிட போவதில்லை.
ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுடனும் நல்லுறவு காட்ட விரும்புகிறது.
பாகிஸ்தான் எங்கள் அண்டை நாடு. எங்களில் பலருக்கு அது இரண்டாவது தாய் நாடு. பாகிஸ்தானில் நிறைய ஆப்கானியர்கள் வசித்து வருகிறார்கள் என்றார் அவர்.
மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த மாட்டோம் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் கூறினாலும் மக்கள் அச்சமடைந்து விமான நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனால் அங்கு பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உள்ளனர்
நேற்றைய தினம் தலைநகர் காபூலில் நுழைந்த தலிபான்கள் அதிபர் அஷ்ரப் கானியை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்
தப்பிய அதிபர்
இவர் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில்:
ஒரு பக்கம் பயங்கர ஆயுதங்களுடன் தலிபான்கள், மறுபக்கம் 20 ஆண்டுகளாக இந்த நாட்டை காக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்த நாட்டை விட்டு செல்வது என்ற இரு கடினமான முடிவுகள் என் முன் வைக்கப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேறினேன்
ரத்தக்களறியை தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். கடந்த சில ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரில் இன்று வரை ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துவருகிறார்கள்.
அது போல் காபூலிலும் தலிபான்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் 60 லட்சம் மக்களுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
உருவான தலிபான்கள்
என்னை அகற்றுவதற்காகவே தலிபான்கள் உருவாகியுள்ளனர். காபூலையும் அங்கு வசிக்கும் மக்களையும் அழிக்கவே அவர்கள் இங்கு வந்துள்ளார்கள்.
பயங்கர ஆயுதங்கள் மூலம் காபூலை கைப்பற்றியதால் தலிபான்கள் வென்றுவிட்டதாக கருதுகிறார்கள். ஆனால் இனிதான் அவர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கிறது.
நாட்டின் மரியாதை
நாட்டின் பெருமை, மரியாதை, செல்வம் உள்ளிட்டவற்றை காப்பதில் அவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. இது போல் ஆயுதங்களின் முனையில் பிடிக்கப்படும் அதிகாரம் எப்போதும் அவர்களுக்கு கை கொடுக்காது. இதை வரலாற்றில் பார்த்துள்ளோம்.
ஆப்கானிஸ்தானின் அனைத்து மக்கள், தேசங்கள், பல்வேறு துறைகள், சகோதரிகள், பெண்கள் ஆகியோரின் இதயங்களை வெல்வது என்பது தலிபான்களுக்கு அவசியமாகிறது.
ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கி அதை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது அறிவாற்றலை கொண்டு என் நாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுவேன். அது போல் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அஷ்ரப் கானி இந்த விளக்கத்திலும் தான் எங்கிருக்கிறார் என்பதை அறிவிக்கவில்லை.
அமெரிக்கா செல்கிறாரா அஷ்ரப்?
அவர் தனி விமானம் மூலம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் ஓமனில் உள்ள அமெரிக்க விமான நிலையத்திற்கு அவர் வந்ததாகவும் விரைவில் அவர் அமெரிக்காவுக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
