எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.. அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
சென்னை:
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நடப்பு ஆண்டில் ஒரு தொகுதிக்கு ரூ 3 கோடியாக மீண்டும் வழங்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
பொதுவாகவே மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியைக் கொண்டு ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நடப்பு ஆண்டில் ஒரு தொகுதிக்கு ரூ 3 கோடியாக மீண்டும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இதேபோல நாடாளுமன்ற எம்பிகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக சில ஆண்டுகள் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி எம்பிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 2 லட்சத்து 29 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:–
* அரசின் நிதி நிலைமை சரிவை நிறுத்தி, அதனை சீர்படுத்துவது மக்களுக்கு நாங்கள் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது. இதற்கு, குறைந்தபட்சம் இரண்டு – மூன்று ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
* வெளிப்படைத் தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுனர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுதல் மற்றும் உறுதியான நடவடிக்கை ஆகிய நான்கு முக்கிய கூறுகளுடன் கூடிய இந்த அரசு செயல்படும் முறையை முதலமைச்சர் தெளிவாக வகுத்துள்ளார்.
* அதே சமயத்தில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை படிப்படியாக செயல்படுத்தப்படும். முதலமைச்சர் பதவியேற்ற நாளிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
* உங்கள்தொகுதியில்முதலமைச்சர் திட்டத்தின் கீழ், மொத்தம் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்கு பின்னர் 2,29,216 குறைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளன.
ஒன்றிய – மாநில நிதி உறவுகள்
* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறையில் ஒன்றிய அரசால் கூட்டாட்சி மனப்பான்மையை நீர்த்துப்போகுமாறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பெட்ரோல் மீதான ஒட்டுமொத்த ஒன்றிய வரி 2014–ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு 10.39 ரூபாயிலிருந்து இன்று 32.90 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல், டீசல் மீதான வரி 2014–ம் ஆண்டு மே மாதத்தில் 3.57 ரூபாயிலிருந்து இன்று 31.80 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
* குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றிய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள், முழுமையாக அக்குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையின்றி தொடர்கின்றன எனவும் இந்தியக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வல்லுநர் ஆலோசனை குழு
* கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்காக வருவாய் மற்றும் வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழு நிறுவப்படும்.
* அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும்.
* மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
மின்னணு கொள்முதல்
* கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை (e –-procurement) கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணு கொள்முதல் வலைத்தளம் ஒன்று உருவாக்கப்படும்.
* திறனையும் வெளிப்படைத்தன்மையும் மேம்படுத்துவதற்காக, திட்டமிடுதல், விலை விவர அட்டவணையை புதுப்பித்தல், செந்தர விலைப் பட்டியலை புதுப்பித்தல், திட்ட வடிவமைப்பு, பணிகளின் மதிப்பீடுகள், ஒப்பந்தப் புள்ளிகள், பணிகளை அளவிடுதல் மற்றும் பணிப்பட்டியல்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
* பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
* அதில் அனைத்து அரசு நிலங்கள் வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும். அதன் மூலம், பொது நலன் திறம்படப் பாதுகாக்கப்படுவதையும், அரசுக்கு வளங்கள் உடனுக்குடன் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில், வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்சினைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.
* இடர் மேலாண்மை அமைப்பு வழக்கு மேலாண்மை அமைப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும். * அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும் முகமைகளிலும் உள் தணிக்கை செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதற்காக அரசில் செயல்படும் அனைத்துத் தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
