“சமூக சேவைக்கு ஒரு லுப்னா சுரையா “
“நவரத்தின நாயகி” என்று மக்களால் போற்றப்படும் சமூக சேவைக்கு எடுத்து காட்டாக திகழும் டாக்டர் லுப்னா சுரையா
பலதரப்பட்ட பரிமாணங்களுடன் போற்றப்படுபவருமான திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் டாக்டர். லுப்னா சுரையா அவர்களை நாம் சந்தித்தோம்.
சமூக சேவையில் சிறந்தோங்கும் லுப்னா சுரையா தங்களைப் பற்றி கூறுங்கள்…
என் பெயர் டாக்டர். லுப்னா சுரையா. என் தந்தையின் பெயர் முஹம்மது உம்மர். தாயாரின் பெயர் ஹாஷாபிபி. எனக்கு இரண்டு பிள்ளைகள். நடுத்தர இஸ்லாமிய குடும்பமாக இருந்தாலும், எனது பெற்றோர் தொலைநோக்கு பார்வையும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
அதன் பலனாகவும் படிப்பின் மேல் அலாதி பிரியம் கொண்ட காரணத்தினால் எட்டு பட்ட படிப்புகளை முடித்துள்ளேன்.
இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கை தொழில்முனைவோர் குறித்து Ph.D ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதற்காக சார்க் நாடு சர்வதேச பொருளாதார பல்கலைக்கழகம் (மாலத்தீவு) டி.லிட் பட்டத்தால் என்னை கௌரவித்தது.
UGC யால் அங்கீகரிக்கப்பட்ட 50 ஆங்கில ஆர்டிகிள்ஸ் வெளியீடுகள், 100 க்கு மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் 12 சிறந்த பேப்பர் ப்ரெசென்ட்டேஷன் ரொக்கப் பரிசுகள், புதுடெல்லி, பரேலி, பெரம்பலூர், மீரட், குஜராத் இப்படி பல்வேறு ஹை இம்பாக்ட் ஜெர்னெல்ஸ்களில் எடிட்டோரில் போர்டு உறுப்பினர், முன்னாள் இலயோலா கல்லூரி (வேட்டவலம்) வணிகவியல் துறை பேராசிரியராக பணி புரிந்துள்ளேன். எனது முதல் புத்தகம் “Understanding HR Lingo” மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் ISSN அங்கீகாரம் பெற்றுள்ளது.
எனது பெயரிலேயே (லுப்னா சுரையா) என்ற யூடியூப் சேனல் இயக்கி வருகிறேன்.
பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு HIV-AIDS, இரத்த தானம், உறுப்பு தானம், சாலை பாதுகாப்பு, துரித உணவின் தீய விளைவுகள், தனிப்பட்ட சுகாதாரம், குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல், பணியிட தொல்லை, உறுப்பு கடத்தல், கழிவு நீக்கம், புவி வெப்பமடைதல் விளைவு, புற்றுநோய், மாதவிடாய், டெங்கு, மலேரியா, நெகிழி, கொரோனா விழிப்புணர்வு, சுய ஊக்கம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பாலின விழிப்புணர்வு அதிலும் மிக முக்கியமாக மூன்றாம் பாலினத்தைப்பற்றி கிராம மக்கள் மற்றும் பொது மக்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இது சம்பந்தமாக பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு உரையாற்றியுள்ளேன்.
27 முறை இரத்த தானம் செய்துள்ளேன். உறுப்பு தானத்திற்கு மோகன் பவுண்டேஷன் (சென்னையில்) பதிவு செய்துள்ளேன்.
கலைஞர், ஜெயா, AMN, TN69 VOICE, NEWS7 தமிழ், சாதனை பெண்கள், தமிழினி, தினமணி, தினத்தந்தி, அவள் விகடன் போன்றவற்றில் தோன்றியுள்ளேன்.
மாணவர் கதிர், மகளிர் கதிர், வணிக கதிர், மருதாணி, புதுவரவு, ட்ரான்ஸ் நியூஸ் (மின்னிதழ்) போன்ற மாத இதழ்களுக்கு தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன்.
இதைத் தொடர்ந்து கொரோனா காலங்களில் FLASH Voluntary Human Touch என்ற பெயரில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டுக்கு வீடு என் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றவர்கள், சாலையோர ஆதரவற்றோர், முதியவர்கள், பிச்சைக்காரர்கள், அனாதைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு எனது மகன் மகளுடன் இணைந்து உதவி செய்து வருகிறேன்.
தாங்கள் பெற்ற விருதுகளைப்பற்றி கூறுங்கள்…
கல்லூரி படிக்கும் காலத்தில் நிறைய பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளேன்.
ஆனால் என்னுடைய சேவைக்காக பாராட்டி சில விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், 2020 ல் தேசிய இந்திய ஐகான் விருது, சிறந்த மனிதாபிமான விருது, ஸ்ரீவாணி பசுமை விருது, சிறந்த சேவா ரத்னா விருது, இந்திய கொரோனா வாரியர் விருது. 2019 ல் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் கையால் சிறந்த சமூக சேவைக்கான அறிஞர் அண்ணா விருது பெற்றேன்.
மேலும் மனிதவளக் கலைமணி விருது, காலம் கனவு ஆசிரியர் விருது, சிறந்த பெண் வித்தகி விருது, சிறந்த பெண் தலைமைத்துவம் விருது மற்றும் கிங் மேக்கர் காமராஜர் விருது. 2015 ல் TBAKC வின் சிறந்த ஆசிரியர்களின் செயல்திறன் விருது ₹12,000 காசோலையாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கையால் பெற்றேன்.
சமூக சேவைப்பணியில் ஆர்வம் வந்த காரணம்…
2008 ல் தூய நெஞ்சக் கல்லூரியில் “மிஸ் காமிட்ஸ் பட்டம்” பெற்ற போது முதல் முறையாக ₹500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
அப்பொழுது அதை நான் பெறாமல் அங்குள்ள டான் போஸ்கோ அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்து விட்டேன்.
இதுதான் என்னுடைய முதல் சேவையாக இருந்தது. பிறகு, கீழக்கரை TBAK கல்லூரி 2015-2016 ல் ரோட்ராக்ட் அமைப்பின் நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தபொழுது புதிய விஷயங்களை செய்ய நினைத்தேன்.
முதலாவதாக ஆடை சேகரிப்பு திட்டம். மாணவர்களின் சேகரித்த பழைய ஆடைகளை ,மாதந்தோறும் தேவைப்படுவோருக்கு ஏர்வாடி தர்காவில் போய் கொடுத்து விட்டு வருவோம். இது நல்ல வரவேற்பை கொடுத்தது. இதைத்தொடர்ந்து, பேப்பர் சேகரிப்பு திட்டம் பாராட்டத்தக்கதாகும் இருந்தது. விடுதியில் தங்கி இருந்த மாணவர்களின் தேவையில்லாத நோட், புத்தகம், பேப்பர், செய்தித்தாள், அட்டை பேட்டிகள் எல்லாம் சேர்த்து எடைக்கு போட்ட பின்பு கிடைக்கும் பணத்தில் மாவிலாந்தோப்பில் மிகவும் வறுமையில் உள்ள குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
கடைசியாக One Rupee to Infinity என்ற திட்டம் மிகவும் போற்றப்பட்டது. அதாவது, குறைந்த பட்சம் ஒரு ரூபாயாவது நன்கொடை அளிக்கவும் என்பதுதான் அது. இதன் மூலம் சேகரித்த பணம் அப்பொழுது 2015 ல் சென்னை வெள்ளத்திற்கு ₹ 20,000 நிதி வழங்கப்பட்டது.
இது எனது சேவைக்கான அடித்தளத்தை உருவாக்கிய சம்பவமாக அமைந்து இன்று வரை தொடர்கிறது.
எதிர்கால கனவுகள்…
அரசு வேலை கிடைக்கனும். கை நிறைய சம்பாதிக்கணும். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம். உயிர் இருக்கும் வரை ஒரு நல்ல மனிதராக வாழ வேண்டும். நான் செய்யும் பணிகளை என்னுடைய வாரிசுகள் நல்ல எண்ணங்களோடு தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும் கனவும்.
கடைசியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை என்றால் நமக்கு நல்லது தானாகவே நடக்கும். ஆயிரம் விஷயங்கள் நல்லது செய்தேன் என்று சொல்லுவதை விட ஒரு தீமையும் நாம் யாருக்கும் செய்ய வில்லை என்று ஆணித்தரமாக சொல்லும் படி இருந்தால் அதுவே போதுமானது.
நல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருக்க கூடாது. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது சொல்லுவார்கள் என்று வாழ்வதை விட, நாம் நமக்கான வாழ்க்கையை சிறப்பாக, சந்தோஷமாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம் என கூறி முடித்தார்
நேர்காணல்: அ.ஷாகுல்அமீது வந்தவாசி







