பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை தெற்கு பகுதி தி.மு.க.
சார்பில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும். நம்மை தற்காத்துக்கொள்ள அது அவசியம். கொரோனா நம்மை விட்டு முழுமையாக போகவில்லை.
உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். பொதுமுடக்க நேரத்தில் முறையாக மருந்து சாப்பிடாததால்தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வரும்போது இறப்பு வரை இழுத்து சென்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துகிறோம். 3 மாதத்தில் 1 கோடியே 90 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம். இதுவரை 2½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
