பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேட்டி:மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு

சென்னை;தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்களை சினிமாவை விட்டே தூக்க வேண்டும். என பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சை நாயகி மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பிரபலம் ஆவார்.

மாடலிங் துறையில் உள்ள சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சினையில் புகார் அளிக்க வந்ததன் மூலம் மீரா மிதுன் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தார்.

பின்னர் பிக்பாஸில் சேரன் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

வெளியில் வந்தப்பின் தொகுப்பாளர் கமல்ஹாசன் மீது விமர்சனம் வைத்தார்.

தொடர்ந்து அஜித், விஜய் மீது விமர்சனம் வைத்து ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

சட்டம் தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கினார்
தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டாலும் அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் பெரிய அளவில் அவரை அது பாதிக்கவில்லை. இதனால் அவர் தான் என்ன பேசுகிறோம் என்பது அறியாமல்  தற்போது மிகப்பெரிய சிக்கலில் மீரா மிதுன் சிக்கியுள்ளார்.

அவர் இதன் மூலம் கைது செய்யப்படலாம். காரணம் அவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதால் வழக்குபாய்ந்துள்ளது.

என்னதான் பேசினார்
சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்துக்கு பேட்டி அளித்த அவர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று , ‘பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.

திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்று பேட்டி அளித்தார்.

பெரும் பிரச்சினையை கிளப்பிய பேட்டி
பட்டியலின மக்களைப் பற்றி மீரா மிதுன் பேசியிருக்கும் வெறுப்புப் பேச்சு, சாதி பெயரை குறிப்பிட்டுத் திட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டியலின மக்களை விமர்சித்து மிகப்பெரும் அரசியல்வாதிகள் எல்லாம் பெரும் சிக்கலில் சிக்கிய சூழலில் மீரா மிதுன் அடிப்படி சட்டப்புரிதல் இல்லாமல் பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னி அரசு உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர்.

விசிக வன்னி அரசு புகார்
வன்னி அரசு அளித்த புகாரைப்பெற்ற சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது ஐபிசி பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2)(மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராக பேசுவது, நடப்பது) 3(1) r, 3(1)(u), 3(1) (s) of SC/ST prevention act (2வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது நிச்சயம்
இவைகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால் மீரா மிதுன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.