தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது
தினசரி பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து 1750 வரை குறைந்து மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு.
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஆரம்பமாகிவிட்டதா என்றும் கேள்விகள் எழுகின்றன.
பாதிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று முதல் (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா், “கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 3 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
*மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
*மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
*சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது.
*அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
*மாவட்டத்தில் உள்ள மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பொருந்தும்.
*பொள்ளாச்சி மாட்டுச் சந்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் பாதிப்பு தலைதூக்கி வரும் நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
