பாஜகவை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் – மம்தா பானர்ஜி அழைப்பு

பாஜக-வை வீழ்த்துவதற்காக தனியாக தன்னால் எதுவும் செய்ய முடியாது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றார்.

பாஜக-வை வீழ்த்த ஒவ்வொருவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லிக்கு ஐந்து நாள் பயணமாக வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கமல்நாத் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, தங்களது சந்திப்பு சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அரசியல் சூழல் குறித்தும், பெகாசஸ், கொரோனா நிலவரம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் வரும் என்று கருதுவதாக அவர் கூறினார்.

பாஜக-வை வீழ்த்துவதற்காக தனியாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளுக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்விக்கு, நான் ஜோசியக்காரர் இல்லை என்ற மம்தா பானர்ஜி, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பல கட்சிகளுடன் முறைப்படி பேச்சுவார்த்தை நடக்கும் என கூறினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் மம்தா பானர்ஜியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார்.