மாநிலங்களுக்கு 13 கோடி தடுப்பூசி
நாளை தொடங்குகிறது புதிய திட்டம்

இந்திய அரசின் புதிய தடுப்பூசி திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் மாநிலங்களுக்கு 13 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசே தடுப்பூசி கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் 13 மாநிலங்கள் தொடர் அழுத்தம் கொடுத்தன.

உச்ச நீதிமன்றமும் இந்திய அரசின் முந்தைய தடுப்பூசி திட்டத்தை கடுமையாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி திட்டத்தை மாற்றுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவீதத்தை இந்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம்.

தனியார் விற்பனைக்கு தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயித்த விலையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

தடுப்பூசி போட சேவைக் கட்டணமாக 150 ரூ தனியார் மருத்துவமனைகள் வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அரசு விநியோகிக்கும் தடுப்பூசியை யார் யாருக்கு முன்னுரிமை அடிப்படியில் போடலாம் என்பதை மாநில அரசுகளே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தடுப்பூசி திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனிடையே, ஜூலை மாத தேவைக்கு 13 கோடி தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்கப்பட வாய்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.