அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்
பரவிஅமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா பிரேசியர் என்ற இளம்பெண். அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம் ஆகும். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேலும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற பெயரில், பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அம்பலப்படுத்திய அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவமாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்ஜ் பிளாய்டின் கொலையை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக புலிட்சர் அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பிரேசியரின் வீடியோவானது, உலகம் முழுவதும் காவல்துறையின் கொடுரமான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதாகவும், உண்மை மற்றும் நீதியை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் குடிமக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாகவும் புலிட்சர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.
அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.
இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உட்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.
அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40-ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
