தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் குறைந்து வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைகளிலும், கொடைக்கல், அம்முர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனோ நோய்த் தொற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமும் குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று சிகிச்சை அளிக்க மாவட்டம்தோறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்பதால் மாவட்டத்திலுள்ள தலைமை மருத்துவமனையிலும் கருப்பு புஞ்சை நோய் சிகிச்சை மையம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் விபத்தினால் கண் பார்வையிழந்த தற்காலிக செவிலியருக்கு பணி நிரந்தரத்திற்கான முன்னுரிமை மற்றும் அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன், தமிழக பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை இயக்குநர் செல்வநாயகம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்
