இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நியாய விலைக் கடைகளை தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காலம் என்பதால், பொருட்களை வழங்க கடந்த மாதங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையே ஜூன் மாதத்திலும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

டோக்கன்கள் விநியோகம்: ஜூன் மாதத்துக்கான பொருட்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற்றிடுவதற்கான டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையில் நான்கு தினங்களுக்கு அளிக்கப்படும்.

இதன்பின் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும். நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொருட்கள் அளிக்கப்படும்.

அவா்கள் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் துவரம் பருப்பு மட்டும் ஜூன் 7-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்.

முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.