104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் உதவி கிடைக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் சித்த மருத்துவ மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
மிதமான தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்த சித்தா மையங்கள் தொடங்கப்படுகின்றன. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கர சூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை போன்றவை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 1,140 சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். சேவை மனப்பான்மையோடு சித்த மருத்துவர்கள் பணி செய்ய முன்வந்தால், அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள்
தமிழகத்தில் தற்போது 12 சித்தா மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் 12 இடங்களில் சித்தா மையங்கள் தொடங்கப்படும். கடந்த ஆண்டு சித்தா மருத்துவ முறையால் 2000 த்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நலம் பெற்றிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், ‘தொற்று ஏற்பட்டவுடன் அனைவரும் மருத்துவமனை செல்வதை தவிர்க்க வேண்டும். மிதமான தொற்று ஏற்பட்டவர்களை குணமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சித்தா மையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மனநல ஆலோசனை, யோக பயிற்சி வழங்கப்படும். 70 படுக்கையுடன் சென்னையில் ஜெயின் கல்லூரியில் அடுத்த வாரம் சித்தா மையம் தொடங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் இலேசான அறிகுறிகள் கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவையில்லை. எனவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் ஆக்சிஜன் படுக்கைகள் வழங்கப்படும். மேலும் ஆக்சிஜன் தேவைப்படுவோர், 104 என்ற சேவை எண்ணுக்கு அழைத்தால், உடனடியாக அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்
