தமிழ்நாடு முதலமைச்சராக மே 7-ம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்யவேண்டும். மருத்துவ ஆக்சிஜன் முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். எந்த காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாகக்கூடாது
” என்றுதெரிவித்துள்ளார்.
எல்லா மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
“கொரோனாவால் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார் அவர்.
முன்னதாக, கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள 2 வார கால முடக்க நிலை குறித்து ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், “பொது மக்கள் அச்சம் தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவந்து, ஆக்கபூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும். கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஒளியின் வேகத்தில் எடுக்கப்படும் என்பதை உறுதிகூற விரும்புகிறேன். தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர்
இதனிடையே, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு, ககன்தீப் சிங் பேடி அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சுனாமி பேரிடரை சிறப்பாகக் கையாண்டு புகழ் பெற்றவர் ககன்தீப் சிங் பேடி.

