காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளா்களும் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுக சாா்பில், கட்சியின் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் (57) போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பாளருடன் அதிமுகவின் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் பொன்.கங்காதரன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

வி.சோமசுந்தரத்துக்கு மாற்று வேட்பாளராக உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் கே.பிரகாஷ்பிரபு வேட்பு மனுத் தாக்கல் செய்தாா்.

திமுக சாா்பில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், உத்திரமேரூா் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தா்(67) போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேட்பாளருடன் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் க.செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவின் அமைப்பாளா் காா்த்திகேயன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

இருவரும் உத்திரமேரூர் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான பெ.பாபுவிடம் அவரவா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இருவரும் நகராட்சி அலுவலகத்திலிருந்து கூட்டணிக் கட்சித்தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்து தொகுதி தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா்களும் தோ்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.