தமிழக சட்டமன்றத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, 1957-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2016-இல் நடந்த சட்டமன்ற தேர்தல்வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றுள்ளார்.

1984-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும், மேலவை உறுப்பினராக இருந்த கருணாநிதி போட்டியிடவில்லை.

தோல்வியே சந்திக்காத கருணாநிதி

மறைந்த கருணாநிதி போட்டியிட்டு வென்ற தேர்தல்கள் மற்றும் தொகுதிகளின் முழு விவரம் இது.

1957 – குளித்தலை சட்டமன்ற தொகுதியில் வென்று முதல்முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி தேர்வானார்.

1962 – தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான பரிசுத்த நாடாரை வென்று மீண்டும் சட்டமன்றத்துக்கு அவர் தேர்வானார்.

1967 – ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டு. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில், சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயகமூர்த்தியை வென்றார்.

1971 – தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை வென்றார்.

1977 – தான் போட்டியிட்ட சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி அதிமுக வேட்பாளர் கிருஷ்னமூர்த்தியை வென்றார். ஆனால், அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பை அதிமுகவிடம் இழந்தது.

1980 – சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுகவின் ஹெச்.வி. ஹண்டேவை வென்றார்.

1989 – சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நான்குமுனை போட்டியில் வென்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

1991 – சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கருணாநிதி வென்றார்.

1996 – சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை வென்ற கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வரானார்.

2001 – தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்த இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

2006 – சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி, ஐந்தாவது முறையாக தமிழக முதல்வரானார்.

2011 – சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016 – சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார். 2016-ஆம் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

தகவல் தொகுப்பு: BBC