அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்

சென்னை

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இதில் அண்ணா தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 11 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வருகிற 12-ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி 19-ந்தேதி முடிகிறது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. மனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அதன்படி, பொது இடங்களில் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. சுவர்களில் வரையப்பட்டு இருந்த கட்சியின் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், பிரச்சாரம் என சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை முதல் முறையாக இன்று சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதில் அண்ணா தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அதிகரிக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடிகள் எவை?, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் நடைமுறை எவ்வாறு இருக்கும்? என்பது உள்பட தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார்.

அப்போது கட்சியினருக்கு அதில் உள்ள சந்தேகங்கள், கூடுதல் விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.