தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை- தேர்தல் ஆணையர் அறிவிப்பு
டெல்லி: தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறை இன்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது, பிற தேர்தல் ஆணையர்களும் உடனிருந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலத்தில் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பீகார் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.
இவ்வாறு சுனில் அரோரா பேசுகையில் கூறினார்
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு வருகை தந்தபோது அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
