புரட்சித் தலைவி அம்மா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல்

செய்யப்பட்டது.

இந்த மசோதாவை உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16–ந்தேதி அன்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்கப்பட்டு விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார். புதிய பல்கலைக்கழகம் இந்த கல்வி ஆண்டிலிருந்து செயல்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் வகையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்டமசோதாவை இன்று சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.

மகளிருக்கு எதிரான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் சட்டமசோதாவை இன்று சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனைகள் 7 ஆண்டுகள் என்ற ஏற்கனவே இருந்தது. இதனை 10 ஆண்டுகளாக உயர்த்த வகை செய்யும் வகையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் வகையிலும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை சுகாதாரத்துறை யிடம் ஒப்படைப்பதற்கான சட்ட மசோதாவை இன்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி ஆகியவற்றை அரசு கல்லூரிகளாக மாற்ற அரசின் மக்கள் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைப்பதற்காக கடந்த மாதம் 27–ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.