ஊடகவியலாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு
மத்திய அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள்(டி.யூ.ஜே) சங்கம் கண்டனம்
சென்னை
டில்லியில் உள்ள செய்தியாளர்கள், ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் மீது மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசார் தேசதுரோக வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்துள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, அவர்களுடன் ஊடகவியலாளர்களும் நின்று துணிச்சலுடன் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்கத்தாலும், இதரர்களாலும் ஊடகவியலாளர்கள் மீது பன்முனைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டமைக்காக, பல பத்திரிகை ஆசிரியர்கள்/உரிமையாளர்கள் உட்பட ஆறு இதழாளர்கள் மீது தேசத்துரோகக் குற்றப்பிரிவு உட்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
நேஹா தீட்சித் என்னும் செய்தியாளரின் வீட்டைத் தாக்கிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் அவருக்கு அடிக்கடி மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
ராஜ்தீப் சர்தேசாய், மிரினாள் பாந்தே, நேஷனல் ஹெரால்டு ஆசிரியர் ஜஃபர் ஆகா, கேரவன் இதழின் ஆசிரியர்கள் வினோத் ஜோஸ் மற்றும் ஆனந்த் நாத் மற்றும் ஆசிரியர்/பிரசுரிப்பவரான பரேஷ் நாத் ஆகியோர் மீதும் தேசத் துரோகக் குற்றப்பிரிவான இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவின்கீழும் மற்றும் இ.த.ச. 153-ஏ, 153-பி, 295-ஏ, 298, 504, 506, 505(2), 34 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளின் கீழும் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஆகிய பிரிவின்கீழும் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரிவுகள் இரு குழுக்களுக்கிடையே விரோதத்தை அதிகரிப்பது தொடர்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பானதும், அமைதியைச் சீர்குலைப்பது தொடர்பானதும், குற்றமுறு மிரட்டல், குற்றமுறு சதி, அழிம்பு செய்தல் போன்ற குற்றங்களாகும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்று, அதானி குழுமத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட செய்தியாளர் பரஞ்சய் குஹா தாகுர்தாவிற்கு எதிராக பிணைவிடாப் பிடியாணை (Non Bailable Warrant) பிறப்பித்திருக்கிறது.
விருதினைப் பெற்ற செய்தியாளரான நேஹா தீட்சித் தனக்குத் திரும்பத் திரும்ப பாலியல் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும், தன்மீது அமிலம் வீசப்படும் என்றும், தான் கொலை செய்யப்படுவேன் என்றும் மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பது குறித்தும், ஜனவரி 25 அன்று தன் வீட்டைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாகவும் காவல்துறையினரிடம் புகார் செய்திருக்கிறார்.
இவ்வாறு ஒருபக்கம் துணிவுடன் செயல்படும் செய்தியாளர்கள்மீது தாக்குதல் தொடுக்கப்படும் அதே சமயத்தில், விவசாயிகள் போராட்டம் உண்மை செய்தி வெளியிடும் பெண் செய்தியாளர்கள் குறித்து இழிவுபடுத்தும் விதத்தில் ட்விட்டர்களில் பொய் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
அவர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடப்படுகிறது.
இச்சம்பவங்களை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
செய்தியாளர்கள், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்.
மேலும் இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று டில்லி பத்திரிகையாளர் சங்கம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
அச்சட்டத்தினை நடப்பு ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உடனடியாக கொண்டுவரவேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு டி.யூ.ஜே. மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
