சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடம், மின்மிகை மாநிலமாகவும் திகழ்கிறது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
கோவை
சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது, மின் மிகை மாநிலமாகவும் திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராமநாதபுரம், அல்வேனியா வழியாக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புளியங்குளம், சிங்காநல்லூர், ரொட்டிகடை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அண்ணா தி.மு.க. அரசு இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்த பகுதியில் கூட அரசு கலை மற்று அறிவியல் கல்லூரி அமைத்து கொடுத்திருக்கின்றோம்.
இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு அடித்தளம் அமைத்த அரசு அம்மாவின் அரசு. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். ‘‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப்” முறையை எளிமைப்படுத்தி உள்ளோம். பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்களுக்கு விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தக பை, மிதிவண்டி, காலணி, திறமையான கல்வி கிடைக்க மடிக்கணினி என மாணவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு.
மருத்துவ காப்பீடு உயர்வு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்து, சட்டம் நிறைவேற்றினோம். இந்தாண்டு 331 பேர் மருத்துவ கல்லூரி படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றோம். 92 பேர் பல் மருத்துவம் பயில்கின்றார்கள். அதேபோல, ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை வழங்க ஏதுவாக 2000 அம்மா மினி கிளினிக் துவக்கி உள்ளோம்.
முதியோர் உதவித்தொகை 5 லட்சம் முதியோருக்கு கொடுப்பதாக அறிவித்தோம் அதில் 90 சதவீதம் வழங்கியுள்ளோம்.
ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுத் தொகையினை 2 லட்சத்தி லிருந்து 5 லட்சமாக உயர்த்தியு ள்ளோம். உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கி உள்ளோம்.
கோவை மாவட்ட மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உயர்மட்ட பாலங்கள் அமைத்து கொடுத்துள்ளோம். ஆக ஏழை எளிய மக்களை காக்கின்ற அரசு அம்மாவின் அரசு.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வந்து மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி கருத்து கேட்டார். இதேபோன்று 2019 ம் ஆண்டு ஒரு கூட்டம் போட்டு, மக்களிடம் இல்லாததைச் சொல்லி, மக்களை குழப்பி அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலிலே வெற்றி பெற்றார். அதே குழப்பத்தை இந்த தேர்தலிலும் ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கிறார்.
அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சி
சிந்தித்துப்பாருங்கள், 2019ல் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்துள்ளீர்களா? இல்லை. ஏனென்றால் இதெல்லாம் ஒரு நாடகம். அந்த நாடகத்தை அப்போது அரங்கேற்றி விட்டார். இப்போதும் மக்களை குழப்பி, அதைச் செய்வேன், இதைச்செய்வேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சிக்கின்றார்.
மக்கள் இதையெல்லம் சிந்தித்துப் பார்த்து எந்த ஆட்சி வந்தால் நாடு வளரும், நாடு செழிக்கும், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை உணர்ந்து வாக்களிக்க கூடிய தேர்தல் இந்த சட்டமன்ற தேர்தல்.
கோவை மாநகரம் கடந்த ஆண்டு இந்தியாவிலேயே பெண்கள் வாழ உகந்த மாநகரமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கினை பேணிக் காக்கின்றது தமிழ்நாடு அரசு. இந்தியாவிலேயே நிர்வாக திறமையின் மூலம் சிறப்பான முறையில் சட்டம் ஒழுங்கினை பேணிக் காக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற காரணத்தினாலே புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன் வந்துள்ளார்கள்.
உபரி மின்சாரம்
கோவை மாவட்டம் தொழில் வளம் மிகுந்த, தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. 2011 வரை தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, இதனால் தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. பலருக்கு வேலையில்லா சூழ்நிலை ஏற்பட்டது.
இன்றைக்கு அந்த நிலை எல்லாம் மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றித் தந்துள்ளோம்.
இன்றைக்கு உபரி மின்சாரம் தயாரிக்கின்றோம் என்றால் எப்படிப்பட்ட திறமையான அரசு அம்மாவின் அரசு என்பதை எண்ணிப்பாருங்கள். இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் முதலிடம், மின்மிகை மாநிலம் போன்றவற்றால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் அம்மா அரசின் நிர்வாக திறமையே ஆகும்.
ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை
கோயம்புத்தூரில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திறக்க நான் பாரத பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசும் அதனை ஏற்று அறிவித்துள்ளது. அதுவும் திறக்கப்படும் போது பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. அம்மா 2011 ம் ஆண்டு பதவியேற்கும் போது 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அம்மா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.
உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் பெற்று தொடர்ந்து கிருஷி கர்மான் விருதினை பெற்று வருகிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலே முதலிடம், போக்குவரத்து துறையில் விருதுகள், சமூக நலத்துறையில் விருதுகள், உள்ளாட்சி துறையில் விருதுகள், கல்வித்துறையில் விருதுகள் என துறைகள் தோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகிறது அம்மாவின் அரசு.
குடிமராமத்து திட்டம்
4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது கடுமையான வறட்சி. இதற்காக நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டுவந்தோம். பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து, ஒரு சொட்டுநீர் கூட வீணாக கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமித்து வேளாண் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்திருக்கின்றோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு. கோவை, வரதராஜபுரத்திலே இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பாக பல கோடி மதிப்பில் கட்டிவருகின்றோம்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை இந்த பகுதியில் செய்து வருகின்றோம்.
ஆனால், இங்குள்ள தி.மு.க உறுப்பினர் எங்களையும் பார்ப்பது இல்லை, மக்களையும் பார்ப்பது இல்லை. இந்த கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றது, ஆனால் சிங்காநல்லூர் தொகுதியில் தில்லுமுல்லு செய்து, பொய் வாக்குறுதி கொடுத்து இந்த சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் திருஷ்டி போல தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க.வின் கோரிக்கையும் நிறைவேற்றம்
வெற்றி பெற்றாலும் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதனால், ஆளுங்கட்சி அமைச்சர்களைப் பார்ப்பது இல்லை. மக்கள் கொடுக்கின்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதும் இல்லை. அதனால், இந்த பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காமல் இருந்தது.
இருந்தாலும், இந்த மாவட்டத்தின் அமைச்சர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தி.மு.க எம்.எல்.ஏ., அ.தி.மு.க எம்.எல்.ஏ. என வேறுபாடு பார்க்காமல், இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தந்த அரசு அம்மாவின் அரசு.
அதேபோன்று, ஜெருசலம் புனிதப்பயணம் செய்ய அம்மாவின் அரசால் ரூ.20,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
அதை தற்போது ரூ.37,000 ஆக உயர்த்திய அரசு அம்மாவின் அரசு. ஆக, அம்மாவின் அரசு மக்களுடைய அரசு, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு, சிறுபான்மையின மக்களையும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கின்ற அரசு என்பதைச் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
வர இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலே கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுமாறு உங்களை எல்லாம் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
