நல்ல திட்டங்களை எதிர்ப்பது தான் ஸ்டாலின் வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கூறினார்.

நாடே போற்றும் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தில் என்ன குறை கண்டீர்கள் என்றும் முதலமைச்சர் கேட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

முதலமைச்சர் சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு உற்சாகமாக வரவேற்றார்கள். அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டார்கள். கைதட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம், பன்னீர் செல்வம் பூங்கா அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

அம்மாவின் மறைவுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் இது. அம்மா குறிப்பிட்டதைப் போல, எனக்குப் பின்னாலும் நூறாண்டு காலம் அண்ணா தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்று சட்டமன்றத்திலே சூளுரைத்தார். தனக்குப்பின்னாலும் வாழையடி வாழையாக கழகம் நிலைத்து நின்று நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற லட்சிய வார்த்தையை சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். அம்மா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் ஆற்றிய சேவை, பணி இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நாட்டு மக்களுக்காக சேவை செய்து வாழ்ந்து மறைந்தார்கள். அவர்கள் வழியில் செயல்படுகிறது அம்மாவின் அரசு.

ஈரோடு மாநகராட்சியில் நாங்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளோம். ஏழை, எளிய மக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மட்டும் 6 அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளோம். இந்த சிறப்பான திட்டத்தை நாடே போற்றி வருகிறது. ஆனால் ஸ்டாலின் இத்திட்டத்தினை எதிர்த்து வருகிறார். இந்த திட்டத்தில் என்ன குறை கண்டீர்கள். அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்ப்பதுதான் ஸ்டாலினின் வேலை.

சாதனைகள்

ஆதிதிராவிட பள்ளி மாணவர்களுக்காக போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்க எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்து, 10ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் வரை ஆண்டொன்றுக்கு ரூ.1500 கோடி போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஈரோடு மாநகரத்தில் மட்டும் ஏழை மக்கள் குடியிருக்க 1850 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக ரூ.62 கோடி மதிப்பீட்டில் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு விரைவில் முடிக்கப்படவுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2 பாதாள சாக்கடை திட்டங்கள் ஒன்று ரூ.45 கோடியிலும், மற்றொன்று ரூ.65 கோடியிலும் நடைபெற்றுக் கொண்டிருகின்றன.

ஈரோடு மாநகரத்தில் மழை அதிகமாக பெய்கின்ற போது மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக மாநகரப்பகுதிகளில் பூமிக்கடியில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டு உள்ளது. அதே போல் ஈரோடு பள்ளிபாளையத்திற்கு ஒரு பாலம் தான் இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனையும் சரிசெய்வதற்கு புதிய பாலத்தை அம்மாவின் அரசு கட்டிக் கொடுத்துள்ளது. பெரும்பள்ளம் ஓடை அழகுபடுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது அம்மாவின் அரசுதான். ரூ.52 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.485 கோடியில் குடிநீர் திட்டம்

அதைவிட முக்கியமானது இங்குள்ள ஈரோடு மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். மக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.485 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டையில் இருந்து நாள்தோறும் ஈரோடு மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும். 98 சதவீத பணி முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 2 சதவீத பணி நிறைவு பெற்ற பின்னர் நானே வந்து குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பேன். இந்த திட்டத்தின் மூலமாக 90,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

ஈரோடு மாநகரத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையினை ஏற்று 2017ம் ஆண்டு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டு அரசு மருத்துவமனை அருகில் உள்ள இந்த பாலம் என்னால் திறக்கப்பட்டது.

அதேபோல் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் மலை வரை மிகப்பெரிய உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க திண்டல் மலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு முதல் பெருந்துறை வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு. தி.மு.க. ஆட்சி காலத்தில் ஈரோடு மாநகர மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. வாக்காளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை

சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி. ஆனால் தி.மு.க ஆட்சியில் அப்படி அல்ல. தவறு செய்தவர்களை காப்பாற்ற நினைப்பதுடன் சட்டத்துக்கு எதிராக நடப்பார்கள். ஆனால், புரட்சித்தலைவர் ஆட்சியிலும் சரி, அம்மாவின் ஆட்சியிலும் சரி, அம்மாவின் மறைவுக்குப் பிறகும் சரி சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்களாக இருந்தாலும் சரி, பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் சரி இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் இந்த அரசால் முழு பாதுகாப்பு வழங்கப்படும். ஜாதி சண்டையும் கிடையாது, மதச்சண்டையும் கிடையாது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசு தான். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற போது தூணாக இருந்து பாதுகாக்கின்ற அரசு அம்மாவின் அரசு. தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மகளிர் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் அதிக அளவில் ஆரம்பிக்கப்பட்டு 1 கோடியே 7 லட்சம் உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் ரூ.80,000 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

சாய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

இப்பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலம் வெளியேறுகின்ற கழிவு நீரை சுத்தப்படுத்துவதற்காக சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பளவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் கீழ் மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் காவேரியில் அசுத்த நீர் கலக்கின்றதோ அங்கெல்லாம் சுத்திகரிப்பு செய்து நீர் விடப்படும். பிரதமரிடம் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரியிருந்தோம். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற செய்தி இடம்பெற்றிருந்தது.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தொடர, கழகத்தின் சார்பில் இங்கே போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.