தமிழகத்தில் கொரோனா சிசிக்சையில் 7 ஆயிரத்து 665 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 494 ஆண்கள், 317 பெண்கள் என மொத்தம் 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 228 பேரும், கோவையில் 87 பேரும், செங்கல்பட்டில் 47 பேரும், சேலத்தில் 44 பேரும், திருவள்ளூரில் 36 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சியில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் நேற்று யாரும் பாதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 23 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 552 ஆண்களும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 595 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 414 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 12 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,188 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 943 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 328 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 7 ஆயிரத்து 665 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, கோவையை தவிர 35 மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் இருந்து தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 2,146 பேரை பரிசோதித்ததில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,122 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 154 பேரை தேடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,146 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3,676 பேரை சோதனை செய்ததில், இங்கிலாந்தில் இருந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் க்கு கொரோனா
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். இதையடுத்து அவர் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கப்பணமும் வழங்கும் திட்டம், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்திருந்தார்.
இந்தநிலையில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளமாறும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அமைச்சர் ஆர்.காமராஜ் சார்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் நிலோபர் கபில், ஆர்.துரைக்கண்ணு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் துரைக்கண்ணு மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
