தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (வயது17) கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இன்று மதியம் சி.பி.ஐ இணை இயக்குனர் வித்தியா டி.குல்கர்னி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி உள்பட 9 பேர் அடங்கிய குழுவினர் திருச்சி சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 5 கார்களில் புறப்பட்டு சம்பவம் நடந்த இடமான தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளிக்கு சென்றனர்.
பள்ளி விடுதி அறையை பூட்டி விட்டு உள்ளே சென்றனர். அங்கு வார்டன், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
மாணவி லாவண்யா தற்கொலை செய்தது எதற்காக? பள்ளியில் ஏதாவது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

