19 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 49 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,

அதன் முடிவுகள் நாளை தெரியவரும். மேலும் 19 வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5, 575 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 50 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்
பல இடங்களில் பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்து அவசியம், முகக்கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திகொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் தானாக முன் வந்து தடுப்பூசியை செலுத்திகொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் உதவி செய்ய வேண்டும்.

கொரோனா தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் தடைவிதிக்கப்படும், மற்ற பகுதிகளுக்கு தடைவிதிக்கும் எண்ணமில்லை. உலக சுகாதார நிறுவனம் கூறும் அத்தனை வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றும். தமிழகத்தில் 1,75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஓமிக்ரான் பரிசோதனை ஆய்வகம் தமிழக முதல்வரின் ஆலோசனையின் படி புதியதாக டி.எம்.சியில் துவங்கியுள்ளோம்.

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இங்கேயே பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிப்போம்,
தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 85 சதவிகிதம் தான் போடப்பட்டுள்ளது,

மக்கள் தடுப்பூசியை, தாமாக முன் வந்து போட்டுகொள்ள வேண்டும். பூஸ்டர் டோசுக்கும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை, அனுமதி அளித்த பின் போடப்படும்” எனக் கூறினார்.