விவாதமே இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க- பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!


டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதங்கள் இல்லாமல் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சனைகளின் மீதான விவாதங்களையும் நடத்த தயார்; எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
விவாதிக்க மறுப்பு
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் முதலில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது.
அப்போது இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றியது.
ராஜ்யசபாவிலும் இதேபோல் விவாதம் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
திரிணாமுல் கண்டனம்
இதற்கு அப்போதே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரைக் ஓ பிரைன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
விவாதங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள தயார் என அறிவித்துவிட்டு இப்போது விவாதமே நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றுவது வெட்கக் கேடானது என தமது ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில்:
நாடாளுமன்றத்தில் விவாதங்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை.
பிரதமர் மோடியும் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இல்லை.
விவசாய சட்டங்களை நிறைவேற்றும் போதும் விவாதம் இல்லை- ரத்து செய்யும் போதும் விவாதம் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார்.
ப.சிதம்பரம் கிண்டல்
இந்நிலையில் இன்று காலை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயார் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள் முதல் அமர்விலேயே விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாய சட்டங்களை நிறைவேற்றிய போதும் விவாதிக்கவில்லை- ரத்து செய்கிற போதும் விவாதிக்கவில்லை.. விவாதமே இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க! என பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம்.
