ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் அனைத்து சமுதாயத்தினரும்
திருப்தியடையும் நிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்குவார்

என நம்புவோம்

திருச்சியில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பேட்டி:

திருச்சி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் திருச்சி பெரிய பள்ளிவாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

அண்மையில் தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின்  பல்லாண்டு காலமாக  சிறைவாசத்தில் இருக்கும்  சுமார் 700 ஆயுள் கைதிகளை  உரிய பரிசீலனைக்குப்  பிறகு விடுதலை செய்ய  ஆவன செய்யப்படும் என்று  சட்டமன்றத்தில் அறிவிப்பு  வெளியிட்டு இருக்கிறார்கள்.  கருணை உள்ளத்தோடு கூடிய  அவரது இந்த அறிவிப்பை  தமிழக மக்கள் பெருமனதோடு  வரவேற்றுக் கொண்டே  இருக்கிறார்கள்.

அப்படி  விடுதலை செய்யப்படுபவர்களுள் பல்லாண்டு காலம்  சிறைவாசத்தை அனுபவித்துக்  கொண்டிருக்க கூடிய  முஸ்லிம் சிறைவாசிகளும்  உள்ளடங்கி இருப்பார்கள்  என்ற பெரும் எதிர்பார்ப்பு  சமுதாய மக்களுக்கு இருந்து  வருகிறது.

ஆனால் எந்தெந்தப்  பிரிவின் கீழ் உள்ள கைதிகள்  விடுதலை செய்யப்படுவார்கள்; யார் யாரெல்லாம்  விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்ற பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதைப்  பார்க்கும்பொழுது ஆயுள்  கைதிகளாக இருக்கும் முஸ்லிம்  சிறைவாசிகள் ஒருவர் கூட  வெளியே வர முடியாத நிலை  வெளிப்படையாகத் தெரிகிறது.

இது தமிழக அரசுக்கோ, தமிழக  முதல்வருக்கோ எதிராகச்  சொல்லப்படும் கருத்து அல்ல. அந்த அரசாணையின்  வாசகம் அப்படியான  புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும், தமிழக  முதல்வர் அவர்கள் கனிவோடு  பரிசீலனை செய்யும்  வகையிலும் விடுதலை அறிவிப்புகள் இருக்கும் என்று அந்த  வாசகத்தின் இறுதிப் பகுதி அமைந்திருக்கிறது.

இது  ஆழமாக சிந்தையில் எடுத்துக்  கொள்ளப்பட வேண்டிய  ஒன்று.  எனவே யாரும் எந்த  வகையிலும் நம்பிக்கை  இழந்து விட வேண்டிய  அவசியமில்லை.

அவரவரது  புரிதலுக்கு ஏற்ப சமூக  ஊடகங்களிலும், பொது வெளியிலும் தவறான கருத்துக்களைப் பரப்பி விமர்சனத்தில் ஈடுபடவும் அவசியமில்லை.

தமிழக முதல்வர் அவர்களைப் பொருத்த வரை அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதற்கொண்டு  மாநிலத்தில் உள்ள மக்களை  சாதி, மதம், இனம், சமுதாயம்  என பாகுபாடுகள் எதுவும் பாராமல் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடிய நிலையில்தான் அவரது செயல்பாடுகளும்,  நடவடிக்கைகளும் மாறாமல்  அமைந்திருக்கின்றன.

அப்படிப் பட்ட அவருக்கு  மாநிலத்தின் அனைத்து  சமுதாயத்தினரும், அனைத்து  மதத்தினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை  இருக்கிறது.  ஒன்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லி இந்தப் பேட்டியை நிறைவு  செய்கிறேன்.

சிறைவாசிகள் விடுதலையில் கலைஞர் செயல்படுத்திய முன்னுதாரணம்

கோவை  குண்டுவெடிப்பு தொடர்பான  வழக்குகளில் கைது  செய்யப்பட்ட சிறைவாசிகள் யாருமே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று  தவறான கருத்துபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அப்படியல்ல!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோவை  குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஆயுள் சிறைவாசிகள் பலரது தண்டனைக் காலத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு பத்தாண்டுகள் குறைத்து,  அதன் அடிப்படையில்  விடுதலை செய்த வரலாறு உண்டு.

அவரது இந்த  நடவடிக்கையை முன்  மாதிரியாகக் கொண்டு,  ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அவரது  தனயனாக சீரிய நல்லாட்சியை  வழங்கிக் கொண்டிருக்கும்  தமிழக முதல்வர் தளபதி மு.க.  ஸ்டாலின் அவர்களும் கோவை  குண்டுவெடிப்பு வழக்கில்  கைதாகி பல்லாண்டு காலம்  சிறைவாசத்தை அனுபவித்துக்  கொண்டிருக்கும் முஸ்லிம்  சிறைவாசிகளை கருணை  உள்ளத்தோடு விடுதலை  செய்து, தனது நடவடிக்கை  சாதி, மத பாகுபாடுகளுக்கு  அப்பாற்பட்டது; பாரபட்சம்  அற்றது என்ற நம்பிக்கையை  நிச்சயம் ஏற்படுத்துவார்  என்று நம்புகிறோம்; வழங்க வேண்டும் என்றும் பணிவுடன்  கோருகிறோம்.

இதே கோரிக்கையை  வாசகங் களாக உள்ளடக்கி,  சமுதாயத்தின் ஒப்பற்ற  தலைவர் இந்தியன் யூனியன்  முஸ்லிம் லீகின் தேசிய  தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பெருந்தகை அவர்களும் ஓர் அறிக்கையை  வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதை இத் தருணத்தில்  மேற்கோள்காட்டுவது மிகப்  பொருத்தம் என்று நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

தகவல்: மன்சூர் வந்தவாசி