ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114-வது ஜெயந்தி விழாவும், 59 வது குருபூஜை விழாவும் வருகின்ற அக்டோபர் 30 ம் தேதி நடைபெறுகிறது

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 8,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற சிலருக்கு மட்டுமே, தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

எந்த வகையான ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் 148 இடங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. 39 சோதனைச் சாவடிகளில் பசும்பொன் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் வாகனச் சோதனையும் மேற்கொள்ளப்படும்.

200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் அதே வேளையில் இயக்கத்தை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் படம் பிடிக்க 80 கையடக்க கேமராக்கள் பயன்படுத்தப்படும். 10 இடங்களில் கலவர தடுப்பு வாகனங்களும், 8 இடங்களில் தண்ணீர் பீரங்கி வாகனங்களும் நிறுத்தப்படும். 16 இடங்களில் ஆம்புலன்ஸ்களும், 18 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள அதிமுக சார்பில் தனக்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் சசிகலா கொடுத்த கடிதத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டார்.

அதிமுக சார்பில் ஏற்கனவே கடிதம் கிடைக்கப்பெற்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் சசிகலாவுக்கு தனியாக நேரம் ஒதுக்கித் தர மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால் நாளை அதாவது வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பசும்பொன் செல்லும் சசிகலா, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் ஆளாக மரியாதை செலுத்தவுள்ளார்.

குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நாளை மறுதினம் (அக்.30-ம் தேதி) நடைபெறுகிறது.

இதில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது அரசியல் கட்சித் தலைவர்களின் வழக்கமாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரம் ஒதுக்கித்தரப்படும்.

அந்த நேரத்திற்குள் அங்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட வேண்டும்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு நேரம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தனக்கு சனிக்கிழமை நேரம் ஒதுக்கித் தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சசிகலா தனியாக கடிதம் கொடுத்திருந்தார்.

அந்தக் கடிதத்தை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த தகவல் சசிகலாவுக்கு கிடைத்ததும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், அதனால் என்ன வெள்ளிக்கிழமை காலையே தேவர் ஐயாவுக்கு மரியாதை செலுத்திவிடுவோம் என பயணத்திட்டத்தை மாற்றியமைக்கச் சொல்லியுள்ளார்.

அதன்பேரில், தஞ்சாவூரில் இருந்து இன்று பிற்பகல் புறப்படும் அவர் சாலை மார்க்கமாகவே மதுரைக்கு சென்று இரவு தங்குகிறார்.

வழி நெடுகிலும் தனது ஆதரவாளர்களை சந்திக்கவும் முடிவெடுத்துள்ளார்.

முதல் மரியாதை
நாளை காலை 7.30 மணிக்கு மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சசிகலா அதன்பின்னர் காலை 8 மணிக்கு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் தனது ஆதரவாளர்கள் படைசூழ பசும்பொன் நோக்கி புறப்படும் அவர் அங்கு காலை 10.30 மணிக்கு முதல் ஆளாக முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல் மரியாதை செலுத்துகிறார்.