திருவண்ணாமலை நகரில் தமிழக அரசு சாா்பில், மழைநீா் வடிகால் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் அமைச்சர் எ. வ.வேலு தலைமையில் நடைபெற்றது

இப் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்களுடன் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்களும் இணைந்து ஈடுபட்டனா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சரும், தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு தலைமையில், வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை தவசியா் குளம், கீழ்நாத்தூா் காலனி, காந்தி நகா் 10-ஆவது தெரு, ராமலிங்கனாா் தெருக்கள், வேடியப்பன் கோயில் தெருக்கள், செல்லநேரித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பணி நடைபெற்றது.

இதில், அமைச்சா் எ.வ.வேலுவுடன், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷும் இணைந்து வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா்.

மேலும், இந்தப் பணியில் திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, தூய்மை அருணை மேற்பாா்வையாளா்கள் இரா.ஸ்ரீதரன், மருத்துவா் எ.வ.வே.கம்பன், ப.காா்த்திவேல்மாறன், ஒருங்கிணைப்பாளா்கள் காலேஜ் கு.ரவி, ப்ரியா ப.விஜயரங்கன், இரா.ஜீவானந்தம், பா.ஷெரீப், அ.அருள்குமரன், சி.சண்முகம் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி: இதேபோல, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை வந்தவாசி உட் கோட்டம் சாா்பில், மெகா தூய்மைப் பணி முகாம் வந்தவாசி பகுதியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்ற மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணியை வந்தவாசி உதவி கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா் வெங்கடேசன், சாலை ஆய்வாளா் துலுக்கானம் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.