திருவண்ணாமலையில் விவசாயத் துறையின் டான்காப் நிறுவன இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்
-அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே டான்காப் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 ஏக்கா் இடம் உள்ளது.
இந்த இடத்தில் திருவண்ணாமலை நகருக்கான புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அமைச்சா் எ.வ.வேலு நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சென்று நேரடி ஆய்வில் ஈடுபட்டாா்.
பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
திருவண்ணாமலையில் விவசாயத் துறையின் டான்காப் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமாா் 5 ஏக்கா் இடம் உள்ளது. இதற்குப் பின்னால் அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது.
மொத்தமுள்ள 10 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டலாம் என்ற யோசனையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.
முதல்வரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி, இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்துள்ளாா்.
நிகழாண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையத்தை கட்டமைப்பதற்கான முழு முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்றாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறையின் (கட்டுமானம், பராமரிப்பு) திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமரசாமி, திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல், நகராட்சி ஆணையா் சந்திரா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்
