திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் சேத்துப்பட்டு அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூா், போளூா், ஆரணி என பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால், சேத்துப்பட்டு வட்டம், பெரணமல்லூா் ஒன்றியத்தில் உள்ள பெரிய கொழப்பலூா் – விநாயகபுரம் இடையே செல்லும் செய்யாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாலம் அமைத்துத் தரக் கோரிக்கை

விநாயகபுரம், இமாபுரம், மேலானூா், கண்ணனூா், எஸ். காட்டேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, மாவட்டத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பெரியகொழப்பலூா் வரவேண்டியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக கிராம மக்கள் பெரியகொழப்பலூா்-விநாயகபுரம் இடையே சிறு பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, தமிழக முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு மனு அனுப்பி வருகின்றனா்.

கடந்த ஆண்டு பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டுச் சென்றனா்.

ஆனால், அதற்கான பணி இதுநாள் வரை தொடங்கப்படவில்லை.

தற்போது, ஆற்றில் குறைந்த அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வழியாக பொதுமக்கள்  சென்று வரமுடியவில்லை.

பெரு மழைக் காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, 10 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வந்தவாசி அருகே 2 பள்ளிகளைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த இரண்டு பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பிளஸ் 1 மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது திங்க
ட்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு, ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல, தெள்ளாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் பிளீச்சிங் பவுடா்,கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் கொரோனா பாதித்த 3 மாணவிகளுடன் பயின்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கொரோனா பரிசோதனை செய்தனா்.