சென்னையில் 49 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது- மாநகராட்சி அதிகாரி தகவல்

கொரோனா தடுப்பூசி
சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தியது போன்ற நடவடிக்கையின் காரணமாக பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை:

கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு முன்னதாக சென்னையில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி விரைவுப்படுத்தி உள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 19 அரசு மருத்துவ மனைகள், 175 தனியார் மருத்துவமனைகள், 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 16 நகர்ப்புற சமுதாயநல மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் சென்னையில் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாநகராட்சி சார்பில் 49 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தியது போன்ற நடவடிக்கையின் காரணமாக பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

19-ந் தேதி கோவிஷீல்டு முதல் தவணை 25 லட்சத்து 5 ஆயிரத்து 783 பேருக்கும், 2-ம் தவணை 11 லட்சத்து 41 ஆயிரத்து 176 பேருக்கும் என மொத்தம் 36 லட்சத்து 46 ஆயிரத்து 959 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவேக்சின் முதல் தவணை 7 லட்சத்து 24 ஆயிரத்து 616 பேருக்கும், 2-ம் தவணை 5 லட்சத்து 5 ஆயிரத்து 698 பேருக்கும் என மொத்தம் 12 லட்சத்து 30 ஆயிரத்து 314 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 48 லட்சத்து 77 ஆயிரத்து 273 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.