ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன

தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவிய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து ஒரு பீப்பாய் 25 டாலருக்கு கீழ் வந்தது.
அந்த நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை உயர்த்திக் கொண்டன.

கடந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பின், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியதும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கினர்.

இதனால், 10 க்கு மேல் உயர்ந்து விட்டது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் இன்னும் விலகாத நிலையில்,  பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருப்பதால் இதன் விலை விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளது.

ஆகவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றும் என அனைவரும் நம்பி வந்தனர்.
ஆனால், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், செப்.17-ம் தேதி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர தமிழகம், மகராஷ்டிரம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும், இதனை ஏற்று கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படாது என அறிவித்திருப்பது, அனைத்து தரப்பினரையும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மத்திய அரசு உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டி வரும் திமுக அரசும், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதை எதிர்த்திருப்பது, திமுகவின் இரட்டை வேடம் போடுவதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இனியும் மக்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.