தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா 
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 12–ந்தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதற்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது.
ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக மொத்தம் 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதில் தமிழக அரசு புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும். 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.
தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தினசரி தடுப்பூசி முகாம்கள் தவிர தகுந்த இடைவேளையில் தொடர்ந்து ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் வாரத்தின் 6 நாட்களில் தலா 5 லட்சம் பேருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடத்தி 20 லட்சம் பேருக்கும் என வாரத்துக்கு 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வாரம் ஒருமுறை ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடத்துவதை கருத்தில் கொண்டு, வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசியும், அதை பொதுமக்களுக்கு போட தேவையான ஊசிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
