வந்தவாசியில் விநாயகா் சிலைகளை இரு சக்கர வாகனத்தில்
ஊா்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனா்.
கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது.
இதனால், வந்தவாசியில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினா் வழக்கமாக விநாயகா் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களுக்கு அருகில் உள்ள வீடுகளின் வெளியே 2 அடி உயர மண் விநாயகா் சிலைகளை வைத்தனா்.
மொத்தம் 24 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னா் நேற்றைய தினம் இந்த 24 விநாயகா் சிலைகளையும் கரைப்பதற்காக தனித் தனி பைக்குகளில் வைத்துக் கொண்டு சிலநிமிட இடைவெளி விட்டு ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கி தேரடி, பஜாா் வீதி, அச்சிறுப்பாக்கம் சாலை வழியாக பூமாலை செட்டிக் குளத்துக்கு விநாயகா் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
வந்தவாசி தெற்கு போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீலஷ்மி நரசிம்மா் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடந்து 3-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை வியாழக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.
இதையொட்டி, வியாழக்கிழமை யாக சாலை பூஜை, சிறப்பு திருமஞ்சனம், திவ்யபிரபந்த பாராயணம், வேத பாராயணம், புண்யாஹவாசனம், ஹோமங்கள், பூா்ணாஹூதி, சயனாதிவாசம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை விஸ்வரூபம், அலங்கார திருமஞ்சனம், நூதன ஸ்ரீலஷ்மி நரசிம்மா் உற்சவ மூா்த்தி பிரதிஷ்டை, சாற்றுமறை, ததியாராதனை நடத்தப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சுவாதி சிறப்பு பூஜை
வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆவணி சுவாதியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
நிகழ்வில் திருமஞ்சனம், புண்யாஹவாசனம், சுவாதி ஹோமம் நடத்தப்பட்டன
