பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்க

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்தாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளை முன்னிட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறை கைதிகளையும் தமிழக அரசு கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சிறைச்சாலைகள் என்பது தவறு செய்தோர் தண்டனை அனுபவிக்கும் இடம் என்பதுடன் அவர்களை சீர்திருத்தும் இடமும் கூட.. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த கைதிகளை கருணையுள்ளத்துடன் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
ஆயுள் தண்டனை அல்லது பல ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தம் பெற்றுப் பிணையில் விடுதலையாகும் உரிமையை சட்டம் வழங்குகிறது.
ஆனால், அந்த உரிமை இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை.
தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.
ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்15-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது அது சமயம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கான அறிவிப்பை செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பதில் அளிக்க உள்ளார்.
இந்த பதிலுரையில் ஆயுட்கால சிறைவாசிகள் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சிறைவாசத்தை முடித்த முஸ்லிம் கைதிகளை தமிழக அரசு இம்முறையாவது விடுவிப்பதே நீதியின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றும் என மீண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
